பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. இதனையடுத்து, மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 6 மாத கால இடைவெளிக்கு பிறகு சட்டசபை இன்று கூடுகிறது.

இதற்கிடையே, சென்னையில் நேற்று நடைபெற்ற சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (அக்.14) தொடங்கி, வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்போது, மறைந்தவர்களின் புகைப்படங்கள் அங்கு இருக்கும் திரையில் திரையிடப்பட உள்ளது. இது தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக நடக்கும் நிகழ்வாகும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.