மண்ணை மலடாக்கும் திட்டங்களை முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார்: அமைச்சர்

மண்ணை மலடாக்கும் அபாயகரமான எந்த திட்டத்தையும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார் என்று சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர், திமுக ஆட்சியில் சலவை தொழிலாளர்களுக்காக 36…

மண்ணை மலடாக்கும் அபாயகரமான எந்த திட்டத்தையும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார் என்று சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர், திமுக ஆட்சியில் சலவை தொழிலாளர்களுக்காக 36 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும், நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் 1,164 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார். மேலும், நாமக்கல் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலங்களில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதாகவும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அரியலூர் மற்றும் கடலூரில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி பேசினார்.நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதையும், அதே போல, மண்ணை மலடாக்கும் எந்த அபாயகரமான திட்டத்துக்கும் முதலமைச்சர் அனுமதி அளிக்கமாட்டார் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

நடப்பாண்டில் நீலக்கொடி திட்டத்தின் கீழ் கடற்கரைகளை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நாகப்பட்டினம் மாவட்டம் நெய்தல் நகர் கடற்கரையும், ராமநாதபுரம் மாவட்டம் குஷி கடற்கரையும் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். பிளாஸ்டிக்கை எரிக்கவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த அமைச்சர் மெய்யநாதன், பள்ளிப் பருவத்திலே மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.