அம்பேத்கர் பிறந்த நாளன்று விசிகவினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் கடந்த ஏப்ரல் 14ம் தேதியன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை கோயம்பேட்டில் நடந்த நிகழ்ச்சியில் பாஜவுக்கும், விசிக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பா.ஜ.க நிர்வாகியான காயத்ரி ரகுராம் உள்பட நூற்றுக்கணக்கானோர் மீது கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு காயத்ரி ரகுராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை அதிகாரி முன்பு 30 நாட்களுக்கு தினமும் காயத்ரி ரகுராம் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.








