தமிழ்நாடு: பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குவாதங்களும் மோதல்களும் நடைபெற்றதால் பரபரப்பு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குவாதங்களும் மோதல்களும் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் 26-வது வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கருப்பசாமி மீது திமுக வேட்பாளர் சூர்யாவின் தந்தை தாக்குதல்…

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குவாதங்களும் மோதல்களும் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் 26-வது வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கருப்பசாமி மீது திமுக வேட்பாளர் சூர்யாவின் தந்தை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி, ஏராளமான தேமுதிகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், தாக்குதல் தொடர்பாக புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து தேமுதிகவினர் கலைந்து சென்றனர்.

அதேபோல, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியின் 2-வது வார்டு அதிமுக வேட்பாளர் முகமது அலியை, அஸ்கர்அலி என்பவர் தம்முடைய மூன்று மகன்களுடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து அஸ்கர் அலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோன்று, திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி அருகே திமுக நிர்வாகிகளும் பாஜக நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த காவல்துறையினர், இருநூறு மீட்டர் தொலைவிற்குள் நிற்க கூடாது என கூறி இரு கட்சியினரையும் எச்சரித்து அனுப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியின் 7-வது வார்டு வாக்குச்சாவடியில் திமுக – அதிமுக முகவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.

இதனையடுத்து, வாக்குச்சாவடி மையம் அருகே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, 200 மீட்டர் தொலைவிற்குள் நின்றிருந்த அரசியல் கட்சி நிர்வாகிகளை விரட்டியடித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.