சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிக்கு உட்பட்ட நகராட்சியில் வாக்களிக்க வந்த இராணுவ வீரர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிக்குட்பட்ட 24, 25, மற்றும் 26ம் எண் வாக்குச் சாவடியில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே கூட்டத்தை கலைந்து செல்லும்படி போலீஸார் எச்சரிக்கை செய்தனர்.
அப்போது 26ம் எண் வாக்குச்சாவடியில் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் பெருமாள் ராஜ் என்பவரின் சகோதரர் பாண்டி கணேஷ் அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்திருக்கிறார். அப்போது பாண்டி கணேஷ் அங்கிருந்த சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்வை நோக்கி கையை உயர்த்தி நானும் இராணுவ வீரர்தான் என்று தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து போலீஸார் அவரின் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனவே அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட தொடங்கினர். போலீஸாரின் தாக்குதலுக்குள்ளான இராணுவ வீரர் பாண்டி கணேஷ், 26ம் எண் வாக்குச் சாவடியில் திமுகவின் சார்பில் ,உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பெருமாள் ராஜ் என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடதக்கது.







