6 நாள் சுற்றுப்பயணத்தைக் கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி ‘தமிழ் மொழி இந்தியர்களுடையது’ என்று புகழாரம் சூட்டினார்.
பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக கடந்த 19 ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றார். முதலாவதாக ஜப்பானில் நடந்த, ‘ஜி – 7’ மாநாட்டில், அவர் பங்கேற்றார்.
பின்னர், 22-ம் தேதி பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற இந்திய – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசினார். பப்புவா நியூ கினியாவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மாரப் பிரதமர் மோடியை வரவேற்றார். அதன் பின்னர் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்.
பின் ஆஸ்திரேலியா சென்ற பிரதமர், சிட்னியில் மிக பிரமாண்ட விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றினார். பின்னர் பயணத்தை நிறைவு செய்த நிலையில் பிரதமர் மோடி, நேற்று மாலை இந்தியா புறப்பட்டார். 6 நாள் சுற்றுப்பயணம் முடிந்து, இன்று காலையில் இந்தியா வந்த பிரதமரை டெல்லியில் பாஜக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா வரும் உலக தலைவர்கள் இந்தியாவை விரும்புகின்றனர். தமிழ் மொழி என்பது நமது மொழி. இது ஒவ்வொரு இந்தியரின் மொழியாகும். அதோடு உலகில் பழமையான மொழியாக தமிழ் உள்ளது. பப்புவா நியூ கினியாவில் ‛டோக் பிசின்’ மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட வாய்ப்பு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது.” என்று பேசினார்.







