வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதால், உடனே நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெல் விவசாயமே பிரதானமாக நடைபெற்று
வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு ,கூமாபட்டி, கான்சாபுரம் ,மகாராஜபுரம்,
தம்பிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயத்தையே நம்பி உள்ளனர்.
வத்திராயிருப்பு தாலுகா பகுதியை பொருத்தவரை சுமார் 6000 ஏக்கரில் கோடை நடவுப் பணிகள் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் மழை பெய்ததின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கண்மாய்களில் நீர் இருப்பதனால் மகிழ்ச்சியுடன் நெல் விவசாய பணியை மேற்கொண்டு தற்போது அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டாலும், மறுபுறம் நெல் கொள்முதல் நிலையம் இல்லாதது மற்றும் நெற்களம் இல்லாதது போன்ற சிரமங்களை தொடர்ந்து ஒவ்வொரு அறுவடை காலத்திலும் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நெற்களம் இல்லாமல் சாலை மற்றும் தனியார் இடத்தில் நெல்லை கொட்டியும் அதனை விற்பனை செய்தும் வருகின்றனர்.
மேலும் அரசால் நெல் ஒரு மூட்டை 1550 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில் தற்போது தனியாரிடம் 1400 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.ஒவ்வொரு கால அறுவடையின் போதும் இதே நிலையை சந்தித்து வருவதாகவும் கொள்முதல் நிலையம் திறக்கும் வரை தங்களால் நெல்லை சேமித்து வைப்பதற்கு இடமில்லாததால் தனியாருக்கு நெல்லை கொள்முதல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் , தங்களை சிரமத்திற்கு ஆளாக்காமல் உடனே வத்திராயிருப்பு பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







