தாம்பரம்: தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ. – சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.   தாம்பரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் எஸ்.ஆர்.ராஜா. இவர் கடந்த 2006 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற…

தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் எஸ்.ஆர்.ராஜா. இவர் கடந்த 2006 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தாம்பரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 

பின்னர் 2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர் தாம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் தாம்பரம் தொகுதி முதன் முதலில் தொடங்கப்பட்டபோது, இவர் திமுக தாம்பரம் மாநகர செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், எஸ்.ஆர்.ராஜா சிங்கப்பெருமாள் கோயில் அடுத்துள்ள மால்ரோசா புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் அவர் திடீரென மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஊழியர்களை அவர் தகாத வார்த்தையில் பேசியதோடு, கை கால்களை உடைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளவும், தான் யார் என்று உனக்கு தெரியுமா? என்று கோபத்தோடு பேசியுள்ளார். இது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

 

அந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக பணியாளர்களை சட்டமன்ற உறுப்பினர் திட்டினார் என்பது குறித்து தகவல் வெளியாகத நிலையில், ஊழியர்கள் அவருக்கு பதில் சொல்வது போன்றும், அதை ஏற்க மறுத்து சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து வாக்குவாதம் செய்வதும் அந்த காட்சியில் இடம் பெற்றுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.