இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2025 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அப்போது அவருக்கு 36 வயது ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மொத்தம் 9,230 ரன்கள் குவித்திருந்தார். அதில் 30 சதங்களும், 7 இரட்டை அரைசதங்களும் அடக்கும். டெஸ்டில் 10,000 ரன்களை கடக்க அவருக்கு 770 ரன்கள் தேவை ஆகும். இந்தியாவின் 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி தொடங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது கிரிக்கெட் உலகிற்கு அதிர்ச்சியாக அமைந்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி முன்கூட்டியே ஓய்வு பெற்றது தனக்கு வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் அவர் கூறியதாவது:
இது 10,000 ரன்கள் என்ற மைல்கல்லைப் பற்றியது மட்டுமல்ல. கோபத்திற்கு ஆளாகாமல், இன்னும் ஆறு மாதங்கள் அவர் இந்தியாவுக்காக விளையாடியிருக்கலாம். ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு மீண்டும் அவருக்கு கிடைக்காது. கோபத்தில் இத்தகைய முடிவுகளை எடுக்கவோ கூடாது. இதனை வெளியிலிருந்து பார்க்கும்போது, அவருக்கு இன்னும் அவகாசம் இருந்ததாகவே தோன்றுகிறது.
ஐபிஎல் (IPL) அல்லது பிற போட்டிகளில் நீங்கள் சிறப்பாகச் செயல்படும்போது, நிச்சயம் மீண்டும் அணிக்குத் (டெஸ்ட்) திரும்ப முடியும். அவர் ஒரு முடிவை எடுத்துவிட்டார். அந்த முடிவை அவர் காலத்திற்கு முன்பே எடுத்துவிட்டாரோ என்று எனக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. அவர் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார். ஆனால் விராட்டைப் பார்க்கும்போது எனக்கு ஜான் மெக்னெரோதான் நினைவுக்கு வருகிறார்.
விராட், சில சமயங்களில் அவர் சற்று அமைதியாக, நிதானமாக இருக்க வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் அந்த ஆவேசத்தை வெளிப்படுத்துவது தனது ஆட்டத்தை மேம்படுத்துவதாக அவர் நினைக்கலாம். அப்படி அது உதவுமென்றால், அதில் என்ன தவறு?
இவ்வாறு அவர் கூறினார்.




