தாம்பரம், கோவை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 32 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்றார். இதனையடுத்து, தாம்பரம் மாநகராட்சியின் 70 வார்டுகளில் உள்ள 40,095 தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றம் செய்யும் திட்டத்திற்கு, மேயர் வசந்தகுமாரி முதல் கையெழுத்திட்டார்.
இதேபோன்று, ஆவடி மாநகராட்சியின் மேயராக ஜி.உதயகுமார் போட்டியின்றி தேர்வு நிலையில், அவர் உடனடியாக பதவியேற்றுக்கொண்டார். அவர், எளிமையான பொருளாதார பின்னணியை கொண்டவர் என்றும், பல்வேறு பொறுப்புக்களில் அவர் சிறப்பாக செயல்பட்டதால், அவரை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதேபோல, கோவை மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றுக்கொண்டார். மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு செங்கோலை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். பின்னர், பீளமேடு பயனீர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கழிவறை கட்டும் பணிக்காக 16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, முதல் கையெழுத்திட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டறிந்து தீர்வு காண முயற்சிப்பேன் என்றும், பொதுமக்கள் தன்னிடம் நேரில் வந்து குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
அண்மைச் செய்தி: சென்னை மாநகராட்சி – மேயராக பதவியேற்றார் பிரியா ராஜன்
இதேபோன்று, சேலம் மாநகராட்சி மேயராக ஆ.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், வெற்றி சான்றிதழை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, ஆ.ராமச்சந்திரன் சேலம் மாநகராட்சி மேயராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







