திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலைத் தவிர்க்க பேச்சுவார்த்தை

திமுகவின் மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கு வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், ஒரே பொறுப்பிற்கு பலர் மனுத்தாக்கல் செய்துள்ளதால், தேர்தலை தவிர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில், திமுகவின்…

திமுகவின் மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கு வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், ஒரே பொறுப்பிற்கு பலர் மனுத்தாக்கல் செய்துள்ளதால், தேர்தலை தவிர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில், திமுகவின் 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் செப்டம்பர் 22 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், திமுகவின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தருமபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இன்பசேகரன் உள்ள நிலையில், அமமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மனுத்தாக்கல் செய்தார்.

அமைச்சர்களாக உள்ள முத்துசாமி, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் தங்கள் மாவட்டங்களுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நேற்று தாக்கல் செய்யப்பட்ட மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரே பொறுப்பிற்கு இருவர், அதற்கு மேலானோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சுமூகமாக மாவட்டச் செயலாளரை தேர்வு செய்யும் வகையில் ஒரே மாவட்டத்தில் கூடுதலாக போட்டியிட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக முதன்மைச்செயலாளர் கே என் நேரு, துணைப்பொதுச்செயலாளர் ஆ ராசா உள்ளிட்டோர் வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் தங்கள் மனுக்களை திரும்பப் பெறவுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.