ஸ்ரீவைகுண்டம் அருகே நவதிருப்பதி கோயில் யானைகள் பராமரிப்பு மையத்தை இந்து
சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவதிருப்பதி கோயில்களில்
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் ஆதி நாயகி என்ற யானையும்,
திருக்கோளூர் வைத்தமாநிதி கோயிலில் குமுதவல்லி என்ற யானையும், இரட்டை
திருப்பதி தேவர்பிரான் கோயிலில் லட்சுமி என்ற யானையும் உள்ளது.
இந்த கோயில்களில் உள்ள யானைகள் அனைத்தும் திருவிழா காலங்களில் தேரோட்டம்
மற்றும் சுவாமி வீதி உலா நடைபெறும்போது அலங்கரிக்கப்பட்டு அழைத்து
செல்லப்படும். இந்நிலையில், நவதிருப்பதி கோயில் யானைகளை பாதுகாத்து பராமரிப்பதற்காக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தோப்பு ஏகாந்த லிங்கேஸ்வரர் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஏழரை ஏக்கர் இடத்தில் நவதிருப்பதி கோயில் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசா சேவா அறக்கட்டளை சார்பில் ரூபாய் 86
லட்சம் மதிப்பீட்டில் யானைகள் தங்குவதற்கும் குளிப்பதற்கும் தனித்தனியாக
இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நவதிருப்பதி கோயில் யானைகள் பராமரிப்பு மையத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார். அப்போது மூன்று கோயில் யானைகள் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் சிறியதாக இருப்பதால் அதனை விரிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, ஆழ்வார்தோப்பில் உள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்கேஸ்வரர்
கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம்
செய்தார். பின்னர் கோயில் பராமரிப்புப் பணிகள் வருவாய் குறித்து அதிகாரிகளிடம்
கேட்டறிந்தார்.
அப்போது கோயிலுக்குச் சொந்தமாக நிலங்கள் அதிகமாக இருந்தும் வருவாய் குறைவாக
உள்ளதால் அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்களை
பயன்படுத்துவோர் வாடகை செலுத்தாமல் இருப்பவர்களை கணக்கெடுப்பு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.








