போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

இளம் தலைமுறையினர் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து…

இளம் தலைமுறையினர் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் சிரிஞ்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி முதல் சிறையில் இருக்கும் ஜெயராமன், ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான இன்றைய (அக்.22) விசாரணையில், “மனோவியல் மருத்துவம் மற்றும் வலி நிவாரணகளுக்கான மாத்திரைகளை இளம் தலைமுறையினர் பலர் போதைக்காக பயன்படுத்துவது தெரியவருகிறது. இது போன்ற மருந்துகள் எளிதாக கிடைப்பதை தவிர்த்து, அவை வழங்கப்படுவதை முறைப்படுத்த வழிகாட்டல்களை பிறப்பிக்க வேண்டும்.” என மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், “மருந்து கட்டுப்பாட்டு துறையின் உதவியாளர்கள் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்டு இதுபோன்ற மருந்துகள் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “மனுதாரரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மாத்திரை வலி நிவாரணியாக மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் அதனை போதைக்கான காரணியாக பயன்படுத்தி உள்ளார். இளம் தலைமுறையினர் பலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவருகிறது.” என்று கூறினார்.

இதனையடுத்து “மனுதாரர் ஏற்கனவே 90 நாட்கள் சிறையில் இருந்த காரணத்தால் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும், தலைமறைவாக கூடாது, சாட்சிகளை கலைக்க கூடாது” என நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.