டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில், இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி இன்று தென்னாப்ரிக்கா அணியை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்ர இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
இறுதியாக இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். தென்னாப்ரிக்கா அணியின் லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் எய்டன் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக ஆடி தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு வித்திட்டது. இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 52 ரன்களும், டேவிட் மில்லர் 59 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் சிறப்பாக ஆடி, சிக்சர்கள் விளாசிய டேவிட் மில்லர், சர்வதேச டி20 போட்டிகளில் 100வது சிக்சர் அடித்த முதல் தென்னாப்ரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆட்ட நாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய லுங்கி இங்கிடி தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியை வீழ்த்தி, வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, புள்ளிப் பட்டியலில் 5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.







