டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்தது. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், நேற்று டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 253 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார். அவர் 42 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். ஷிவம் துபே 43 ரன்னும், இஷான் கிஷன் 39 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் வில் ஜாக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே பெத்தேல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இந்தியா இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.