மணிப்பூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டித்தழுவி ஆறுதல் கூறிய ஸ்வாதி மாலிவால்!

மணிப்பூரில் ஒரு கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கடந்த மே 4-ம் தேதி, மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில்…

மணிப்பூரில் ஒரு கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடந்த மே 4-ம் தேதி, மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிலரை மைத்தேயி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடத்திச் சென்றனர். அவர்களில் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சுற்றிலும் ஆண்கள் புடைசூழ செல்போன் கேமராக்களில் படம் பிடித்துக் கொண்டே ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதோடு, ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அந்த கும்பல், தங்களை விட்டு விடும்படி அந்த இளைஞர்களிடம் பழங்குடியின பெண்கள் கெஞ்சிய போதும், தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது.

அதிலும் இச்சம்பவத்தை தடுக்க முயன்ற ஒரு பழங்குடியின இளைஞரையும், பெண் ஒருவரின் தந்தையையும் அந்த கும்பல் அடித்துக் கொன்றதோடு, அந்த ஊர் மக்களை அச்சுறுத்தும்படியான வன்முறை சம்பவத்திலும் ஈடுபட்டனர்.

நாட்டையே வெட்கி தலைகுனிய வைத்த இந்த சம்பவம் தொடர்பான விடியோ காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியாகி நாட்டையே உலுக்கி வரும் நிலையில், நாடு முழுவதும் கொந்தளிப்பும், கண்டனங்களும், போராட்டங்களும் அங்கங்கே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக, சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு வரவேண்டாம் என மணிப்பூர் மாநில அரசு விடுத்திருந்த கோரிக்கையை மீறி இரு தினங்களுக்கு முன் மணிப்பூர் சென்றிந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அங்கு பல நிவாரண முகாம்களில் இடம்பெயர்ந்திருந்த மக்களை சந்தித்து உரையாடி வந்தார்.

மேலும் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில், பயணத்தின் போது தனது சவாலான அனுபவத்தைப் பகிர்ந்து வந்த மாலிவால், மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு மாநில அரசு தனக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், உயிர்
பிழைத்தவர்களுக்கு இதுவரை ஆலோசனை, சட்ட உதவி மற்றும் இழப்பீடு ஏன் கிடைக்கவில்லை என்று கேள்வியும் எழுப்பி குற்றம் சாட்டி வந்தார்.

தற்போது அவரது பயணத்தின் தொடர்ச்சியாக இன்று இம்பாலில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு அணிவகுக்கப்பட்ட சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட இருவரின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்த மாலிவால், இந்த கொடூர சம்பவம் குறித்த விவரங்களை அவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டித்தழுவி ஆறுதல் கூறிய அவர், தான் எப்போது துணை நிற்பதாக உறுதியளித்தார்.

பின்னர் இது குறித்தும் ட்விட் செய்திருந்த மாலிவால் அதில் “மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு மகள்களின் குடும்பத்தை நான் சந்தித்தேன். ஒரு பெண்ணின் கணவர் ராணுவ வீரராக இருந்து நம் நாட்டின் எல்லையை பாதுகாத்தவர். இதுவரை யாரும் அவர்களை சந்திக்க வரவில்லை. அவர்களை சந்திக்க வந்த முதல் ஆள் நான் தான் என்று அவர்கள் சொன்னார்கள். மற்றொரு பெண்ணின் தாயையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்” என்று அவர் பகிர்ந்திருந்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.