காளையார்கோவில் அருகே, கண்மாய் மடை மற்றும் கழுங்கு கட்டப்பட்ட 3 ஆண்டுகளிலேயே சேதமடைந்துள்ளதால் அதை சரி செய்ய கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கட்டப்பட்டு 3 ஆண்டுகளே ஆன
கண்மாய்களின் கழுங்கு, மடை சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி விவசாயம்
பொய்த்து போனது. அதனை சரி செய்யக்கோரியும், அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்க கோரியும் இரண்டு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய
அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருங்காலி கிராம கண்மாய் மடை மற்றும் கல்குளம் கண்மாய் கழுங்கு ஆகியவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே ஒப்பந்தம் விடப்பட்டு
புதிதாக கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டுமான பணி தரமற்ற முறையில் இருப்பதால்,
கட்டப்பட்ட சிறிது நாட்களிலேயே கழுங்கு மற்றும் மடை இரண்டும் சேதமடைந்தது.
இதனால் கண்மாய் தண்ணீர் முழுவதும் வெளியேறி வினானதுடன் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதன் காரணமாக விவசாயமும் கடந்த மூன்று ஆண்டுகளாக பொய்த்து போனது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தது.
இது குறித்து ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் சார்பில் பலமுறை மனு வழங்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும்
அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், இன்று இந்த இரு
கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காளையார்கோவில்
ஊராட்சி ஒன்றிய அலுவலக்த்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமற்ற
முறையில் கண்மாய் மடை, கழுங்குகளை கட்டிய அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர்கள்
மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
—–ம. ஶ்ரீ மரகதம்







