சூர்யா 44 கேங்ஸ்டர் படமில்லை என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 44’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, ‘சூர்யா 44’ படத்தின் வீடியோக்களை வைத்து இது கேங்ஸ்டர் படம் என பலரும் கருதினர். ஆனால் இது கேங்ஸ்டர் படம் இல்லை என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது,
“சூர்யா 44 கேங்ஸ்டர் படமில்லை. காதல் கதையுடன் கூடிய அதிகமான சண்டைக் காட்சிகள் இருக்கும். எனக்கு மிகவும் நீண்ட நாள்களாக காதல் கதையை படமாக்கும் எண்ணம் இருந்தது. அதிலும் சூர்யா சார், பூஜா ஹெக்டேவை வைத்து படம் பண்ணும்போது மிகுந்த ஆவலாக இருந்தது. படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்தாலும் இந்தப்படம் அடுத்தாண்டு கோடைக்காலத்தில்தான் வரும். ஆனால், ரிலீஸ் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. போஸ்ட் புரடக்ஷன், இசைக்கு அதிக நேரம் செலவிடுகிறோம்.”
இவ்வாறு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.







