டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடிகர் கமல்ஹாசன் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி ஒன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு சீசனாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் திரையுலகில் பிரபலமடைந்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் நிறைவடைந்து 6-வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. எந்தவித வெளி தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டில் 100 நாட்கள் தங்குவதும், அங்கு நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தியே அந்த நிகழ்ச்சி நகர்ந்து செல்லும். ஒவ்வொரு நாளும் அந்த வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் சில நேரங்களில் இணையதளங்களில் பேசுப்பொருளாக மாறும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.
அந்த வகையில், டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து கேட்ட கேள்வி ஒன்று நேற்று முதல் இணையதளங்களில் வைரலாக பரவி ரசிகர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது. நேற்று தொடங்கிய நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து முதல் நபராக அந்த வீட்டின் உள்ளே சென்றுள்ளார். அவரிடம் நடிகர் கமல்ஹாசன் எப்படி உணருவதாக கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதிலளிக்கும் ஜி.பி.முத்து, இங்கு யாரும் இல்லை நான் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கிறார்.
உடனே, ஆதாம், ஏவாளை சுட்டிக்காட்டி அவர்கள் முதலில் வந்தவர்கள், அதனால் ஆதாமிற்கு எப்படி இருந்திருக்கும் என கமல்ஹாசன் உதாரணத்தை எடுத்து வைக்கிறார். அதற்கு ஜி.பி.முத்து எதர்ச்சியாக ஆதாமா.. யார்? என்ற தோனியில் கேள்வியை கேட்கிறார். இதனால் கமல்ஹாசன் ஒருசில நிமிடங்கள் அதிர்ச்சியடைவது போன்று அந்த காணொலியில் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நகைச்சுவையாக ஜி.பி.முத்து கேட்ட கேள்வி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே, அவருடைய டிக்டாக்குகளுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், பிரபலமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கே உரிதான பானியில் பேசி, நடிப்பதை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.