ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த கொலைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தம் ஆனந்த். இவர் நேற்று முன் தினம் காலை வழக்கம்போல தனது வீட்டின் அருகே, சாலையின் ஓரமாக நடைபயிற்சி சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கீழே விழுந்து படுகாயமடைந்த நீதிபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த இந்த நீதிபதி, அந்தக் கும்பலை சேர்ந்த 2 பேருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளார். அதனால், அவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி ரஞ்சன் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் பிரதிநிதிகள், தலைமை நீதிபதி ரமணாவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது, தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறும்போது, நீதிபதி கொலை தொடர்பாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு பேசினேன். இந்த வழக்கை நாங்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என்றார்.
இந்நிலையில் இந்த வழக்கில், ஆட்டோ ஓட்டுநர் லக்கன் குமார் வர்மா, அவர் கூட்டாளி ராகுல் வர்மா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஆட்டோவை திருடி சென்று, இந்த கொலையை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.