கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறுகூறாய்வில் மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, கட்டடத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இப்பிரச்னை தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாணவி ஸ்ரீமதியின் முதல் உடற்கூறாய்வில் சந்தேகம் ஏற்பட்டதால், இரண்டாவது முறை உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த மருத்துவக் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரையும் சேர்க்க வேண்டும் என்றும் மாணவி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் மறு உடற்கூறாய்வுக்கு அனுமதி அளித்து, உடற்கூறாய்வு வீடியோ பதிவு செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாணவி தரப்பு மருத்துவரை சேர்க்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதைத்தொடர்ந்து, மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் இதற்கு மறுப்புத் தெரிவித்து மறு உடற்கூறாய்வுக்கு மட்டும் அனுமதி வழங்கி வழக்கை ஒத்திவைத்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்போது நம்பிக்கை இல்லை என்றும், இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்ற தந்தையின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். வேண்டுமென்றால் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றார். இதைத்தொடர்ந்து, மாணவியின் தந்தை வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்று இன்று நல்லடக்கம் செய்ய செய்யப்போவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 2 மணிக்குள் உடலைப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். மாணவியின் உடல் நல்லடக்கம் செய்ய கிராமத்தில் வருவாய்த் துறையினர் முழு ஏற்பாடு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மாணவியின் தந்தை ராமலிங்கம் மற்றும் தாய் செல்வி ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
-ம.பவித்ரா