கர்நாடகாவில் பைக், டாக்சிகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு – அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் மாநில அரசு பைக் டாக்சி சேவைகளை அனுமதிக்கும் கொள்கையை வெளியிடும் வரை, அச்சேவைகளை நிறுத்துமாறு கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓலா, ஊபர், ராபிடோ, மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மற்றும் பைக் டாக்சி நலச் சங்கம் ஆகியோர் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய டிவிசன் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, என். கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பைக் டாக்சிகளைத் தடை செய்வதைவிட உரிய விதிமுறைகளை உருவாக்கி முறைப்படுத்துவதே சிறந்தது என்றும், பெண்களின் பாதுகாப்புக்கு ஜி.பி.எஸ் வசதி உதவியாக இருப்பதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் பைக் டாக்ஸி மலிவான கட்டணம் இருப்பதால் அதன் மூலம் லட்சக்கணக்கானோர் பயன்பட்டு வருகின்றனர் எனவும், பைக் டாக்ஸிகளை இயக்க எந்த ஒரு தடையும் இல்லை என்பதை மத்திய அரசும் சுட்டிக்காட்டி இருக்கக்கூடிய சூழலில், பைக் டாக்ஸி இயக்கத்துக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.