வெளிமாநில ஆம்னி பேருந்துகள் விவகாரம் – தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

தமிழ்நாட்டில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என்ற மாநில அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டு மோட்டர் வாகன சட்டப்படி தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளே…

தமிழ்நாட்டில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என்ற மாநில அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டு மோட்டர் வாகன சட்டப்படி தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளே இயக்க அனுமதி உள்ளது. ஆனால் பல ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டின்அண்டை மாநிலங்களிலும், பிற வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளை இங்கு இயக்கி வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசுக்கும்,  போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்குவதற்கு பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த 18-ம் தேதி வரை ஆம்னி பேருந்துகள் இயக்க அவகாசம் வழங்கப்பட்டது. அவகாசம் முடிந்த நிலையில் விதியை மீறி இயங்கிவரும் பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று (ஜூன் 25) உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “அகில இந்திய சுற்றுலா பெர்மிட் பெற்றிருந்தால் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்குவதை தமிழக அதிகாரிகள் தடுக்கக்கூடாது” என்று உத்தரவிடப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த மனு மீது பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.