சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் நிர்வாகக் குழுவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாகப் பொது தீட்சிதர்களுக்கும் தமிழக அரசுக்கும் இடையே நீண்டகாலமாகப் பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக, கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு நடத்துவது, கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, வரவு-செலவு கணக்குகள் மற்றும் கோயிலின் பாரம்பரியக் கட்டடங்களைப் பராமரிப்பது தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் 30-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஐந்து பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தீட்சிதர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்!

இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் கோயில் நிர்வாகம் இருந்தபோது அனைத்து கணக்கு வழக்குகளும் முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதற்கான முழுமையான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் அரசு தரப்பில் ஒருவர் மூலமாகப் பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், அதன்பிறகே அரசு தரப்பு வழக்கிற்குள் நுழைந்ததாகவும் வாதிட்டார்.

கோயிலை நிர்வகிப்பதற்காகத் தனியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த விவகாரங்கள் அனைத்தும் கனகசபையில் வழிபாடு நடத்துவது தொடர்பான பிரச்சினை மற்றும் தமிழக அரசின் 2022-ம் ஆண்டு அரசாணையை எதிர்த்த வழக்கு மட்டுமே என்றும் வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்!

இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, கனகசபைக்குள் சென்று பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என்று வாதிட்டார். மேலும், பொது தீட்சிதர்கள் பணம் வசூலிப்பதாகப் புகார்கள் இருப்பதாகவும், பல்வேறு விவகாரங்களில் முறையான கணக்கு விவரங்களைச் சமர்ப்பிப்பதில்லை என்றும் தெரிவித்தார். பழமையான கோயிலில் பல்வேறு கட்டுமான மாற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக ஹெரிடேஜ் கமிட்டியின் பரிந்துரைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்கக் குழு அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாகப் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகக் குழு அமைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தற்போது இடைக்காலத் தடை கிடைத்துள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் தமிழக அரசின் பதிலும் முக்கியத்துவம் பெறும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.