கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 2025-26 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (நவம்பர் 4) தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு ஊக்கத்தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக, 3 கரும்பு விவசாயிகளுக்கு அதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
சட்டப்பேரவையில் அறிவித்த திட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதுடன் கரும்பு உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்கில் இந்தச் சிறப்பு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது.
கடந்த 10.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், 2025-26 அரவைப் பருவத்திற்குச் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் தற்போது ஊக்கத்தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
85,000 விவசாயிகள் பயன்பெறுவர்!
இந்தச் சிறப்புத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 85,000 கரும்பு விவசாயிகள் பயன்பெற உள்ளனர். இதற்காக நடப்பு ஆண்டில் மட்டும் அரசுக்கு ரூ.603 கோடியே 33 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை!விவசாயிகளின் நலனையும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.709.50 என்ற கூடுதல் ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுவதன் மூலம், கரும்பு விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.




