இந்து மத துறவிகளுக்கு எதிராக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட வழக்கில் பத்திரிகையாளர் முகம்மது சுபைருக்கு உச்சநீதிமன்றம் 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது.
கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும், ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான முகம்மது சுபைருக்கு எதிராக டெல்லி, ராய்ப்பூர், உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஜகதீஷ் சிங் என்பவரின் பேத்தியின் படத்தை சமூக ஊடகங்களில் அவதூரான நோக்கத்துடன் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக முகம்மது சுபைருக்கு எதிராக டெல்லி மற்றும் ராய்ப்பூரில் வழக்குப் பதியப்பட்டது. இவ்விரு வழக்கிலும் கைது செய்யப்படாமல் இருக்க டெல்லி உயர்நீதிமன்றத்திலும், ராய்ப்பூர் உயர்நீதிமன்றத்திலும் சுபைர் தடை உத்தரவு பெற்றுள்ளார்.
மகந்த் பஜ்ரங் முனி, யதி நரசிங்கானந்த், சுவாமி ஆனந்த் ஸ்வரூப் ஆகியோரை வெறுப்பை பரப்புபவர்கள் என முகம்மது சுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் சீதாபூரில் வழக்குப் பதியப்பட்டது. மத உணர்வை புண்படுத்தும்படி நடந்து கொண்டது, சமூக ஊடகத்தில் ஆட்சேபத்துக்குரிய ஒன்றை பதிவிடுவது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் ஷர்மா தொலைக்காட்சி ஒன்றில் முகம்மது நபி குறித்து அவதூறாக பேசியதன் வீடியோ காட்சியை, முகம்மது சுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை அடுத்தே, அது இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் பரவத் தொடங்கியதாக நுபர் ஷர்மா குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், ராமபக்தராகவும் கடவுளாகவும் போற்றப்படும் ஆஞ்சநேயர் குறித்து அவதூறாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது தொடர்பாக டெல்லி போலீசார் முகம்மது சுபைரை கடந்த ஜூன் 27ம் தேதி கைது செய்தனர்.
சீதாபூர் வழக்கு தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறை தனக்கு எதிராக பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரியும், தம்மை ஜாமினில் விடுவிக்கக் கோரியும் முகம்மது சுபைர் தாக்கல் செய்த மனுவை சீதாபூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜே.கே.மகேஸ்வரி அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சமூகத்தில் மத ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் முகம்மது சுபைர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், எனவே, அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் வாதிட்டார். வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறாரா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சீதாபூர் வழக்கில் மட்டும் முகம்மது சுபைருக்கு 5 நாட்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளிப்பதாக உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் கருத்து பதிவிடக் கூடாது என்றும் நிபந்தனையில் குறிப்பிட்டுள்ளனர்.










