அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி திமுக கட்சி ஆட்சியை பிடித்தது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக தற்போது எதிர்கட்சியாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பல அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இந்த பதிவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யார் யார் வீட்டில் எப்போது சோதனை நடைபெற்றது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில், 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.
2021ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
அதிமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு பிறகு உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜுக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.