இபிஎஸ் மேல்முறையீட்டு மனுவில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு- உச்சநீதிமன்றம்

இரட்டை இலை சின்னம் கோரி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 நாளில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி…

இரட்டை இலை சின்னம் கோரி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 நாளில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் மேனகா போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், தயவு செய்து பதிலளிக்க காலதாமதம் செய்யாதீர்கள் என தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், அதிமுக வழக்கில் பழனிசாமி தரப்பின் எதிர்மனுதாரர்கள் 3 நாள்களில் பதில் அளிக்கவும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதோடு, விசாரணை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட ஏதுவாக இடைக்கால மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார். அந்த இடைக்கால மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.