காவிரியில் தமிழகத்துக்கு 11 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி மனுவை கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்ற தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதன் விரிவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2018ம் ஆண்டு காவிரி இறுதித் தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்கற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
2018ம் தீர்ப்பின் அடிப்படையில் இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர் பங்கீட்டை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு இந்த இரண்டு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நீரை திறப்பதற்கான அட்டவணையை கண்காணித்து அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த இரண்டு அமைப்புகளிடம் உள்ளது.
நிபுணர்கள் அடங்கிய இந்த அமைப்புகள், நீர் விவகாரத்தில் முடிவுகள் எடுத்து செயல்படுத்தி வரும் நிலையில் அதில் தலையிடுவது பொருத்தமானதாக இருக்காது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி முடிவுகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் நீரைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரிகளின் பணியை உச்ச நீதிமன்றம் ஏற்க வேண்டும் என கூறுவது நியாயமானது அல்ல, பொருத்தமானதும் அல்ல.
பற்றாக்குறை காலங்களில் நீரை பகிர்வது தொடர்பாக காவிரி ஒழுங்காற்றுக் குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தான் தான் முடிவு எடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. காவிரி நீர்ப் பகிர்வு விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்துள்ள நிலையில், எந்த ஒரு மாநிலத்திற்கும் தனி உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமானது என்று உச்ச நீதிமன்றம் கருதவில்லை. எனவே, இந்தப் பிரச்சினைகளை காவிரி மேலாண்மை ஆணையம், மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு பரிசீலிக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு அரசு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.




