ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜேசுரதி என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் தாதன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவனின் தந்தை, கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் மாணவர் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று மாணவர்களுக்கு தேர்வு விடைத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட மாணவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ஜேசுரதி, மாணவரை கம்பால் முதுகு மற்றும் கையின் பின்புறத்தில் பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் மாணவருக்கு உடலின் மூன்று இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறி பள்ளி மாணவர் ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




