காட்டுமன்னார்கோவில் அருகே ராட்சத முதலை கடித்து ஒருவர் காயம்!

காட்டுமன்னார்கோவிலில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 8 அடி நீள ராட்சத முதலை ஒருவரைக் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ள கோப்பாடி கிராமத்தில், ராஜன் வாய்க்காலில் இருந்து சுமார் 8 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட ராட்சத முதலை ஒன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளது. அப்போது முதலையை பார்த்து அப்பகுதியில் இருந்த நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜேந்திரன் (44) என்பவரை திடீரென முதலை கடித்தது. இதில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து காயமடைந்த ராஜேந்திரனை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ராட்சத முதலையைப் பிடிக்க வனத்துறையினர் காலை 8 மணி வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த ராட்சத முதலையைப் பாதுகாப்பாகப் பிடித்து எடுத்துச் சென்றனர். அதிகாலை நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலை ஒருவரைக் கடித்த சம்பவம் கோப்பாடி கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.