பட்டாசு வெடிக்க தடையில்லை; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வரவேற்பு

மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் ஒட்டுமொத்தமாக தடை விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  மேற்கு வங்க மாநிலத்தில் காளி பூஜை,…

மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் ஒட்டுமொத்தமாக தடை விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் காளி பூஜை, தீபாவளி, குருநானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின் போது அனைத்து வகையான பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் தடைவிதித்ததோடு, அதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று  கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக “கௌதம் ராய்” என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பட்டாசால் கடும் மாசு ஏற்படுகிறது. பசுமை பட்டாசு என்ற போர்வையில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு தநாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்கப்படுகின்றன, மேலும் பட்டாசுகள் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில், பசுமை பட்டாசு தான் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கிவிட்ட நிலையில் தற்போது தடை விதிப்பது பலரின் வாழ்வாதாரத்தை இழக்க செய்யும். எனவே மேற்கு வங்கத்தில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இவற்றை கேட்ட நீதிபதிகள், பட்டாசுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல பட்டாசு வெடிக்கவே கூடாது எனவும் கூறவில்லை மாறாக பட்டாசால் மாசு ஏற்படுவதை தடுக்க பட்டாசு உற்பத்தியில் புதிய புது யுக்தி மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள் என்றே கூறுகிறோம் என தெரிவித்தனர். அத்துடன் மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் ஒட்டுமொத்தமாக தடை விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாகவும் ஆனால், பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற கொல்கத்தா நீதிமன்றத்தின் உத்தரவில் மாற்றமில்லை என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து “நன்றி உச்சநீதிமன்றத்திற்கு… ஏழை சிவகாசியின் சார்பாக” என ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/manickamtagore/status/1455130602869387264

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.