தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தசரா விரதமிருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மாலையைக் கழற்றச் சொல்லித் தாக்கிய தலைமை ஆசிரியர் ஒருபுறம்; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 10-ஆம் வகுப்பு மாணவியின் கைக் காப்பினை மறைக்கச் சொன்ன தலைமை ஆசிரியை மறுபுறம் என, அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவப் பருவத்திலேயே பிஞ்சு நெஞ்சங்களில் வன்மத்தை விதைத்து, அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் வழிபாட்டு உரிமையையும் நசுக்கும் இத்தகைய மனித உரிமை மீறல்கள் கல்விக்கூடங்களில் தலைவிரித்தாடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
முதலமைச்சரின் விஜயின் ஆட்சி அமைந்தது முதலே இத்தகைய மத அடக்குமுறைச் சம்பவங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இந்த அரசின் அமைச்சர்களே நடுநிலையின்றி, ஒரு குறிப்பிட்ட மத உணர்வோடு பாரபட்சமாகச் செயல்படுவதை முன்னுதாரணமாகக் கொண்டே பள்ளி நிர்வாகங்களும் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன.
கல்வி நிலையங்கள் என்பவை சமத்துவத்தையும் மத நல்லிணக்கத்தையும் போதிக்கும் ஆலயங்களாக இருக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட ஒரு மதத்தின் அடையாளங்களைப் பறிக்கும் கூடங்களாக மாற அரசு ஒருபோதும் துணைபோகக் கூடாது.எனவே, ஆத்தூர் மற்றும் தக்கலை பள்ளிச் சம்பவங்களில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்கள் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இனியாவது
தவெக அரசும் அதன் அமைச்சர்களும் ஒருதலைப்பட்ச மதச் சார்போடு செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




