சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயகக் கட்சியை ஆரம்பித்த தமிமுன் அன்சாரி, 2016 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதிமுக சின்னத்தில் வெற்றிபெற்றிருந்தாலும் அரசின் பல்வேறு நிலைப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார் தமிமுன் அன்சாரி.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தமிமுன் அன்சாரி அறிவித்தார். எனினும், திமுக தரப்பிலிருந்து அதற்கு சரியான பதில் வரவில்லை என்பதால் ஆதரவை வாபஸ் பெறுகிறார் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில் மஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் திமுகவுக்கு ஆதரவு தருவது என முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தமிமுன் அன்சாரி தலைமையில் மஜக நிர்வாகிகள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, திமுக கூட்டணிக்கு 5 அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி ஆதரவு தெரிவித்துள்ளோம். பாசிசத்துக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோம். தொகுதி கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால் இதை ஒரு காரணமாக கூறி மதவாதத்துக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்றும் கூறினார்.







