1994ம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி கிரியோஜெனிக் இந்திய ராக்கெட் இன்ஜின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாகக்கூறி கைது செய்யப்பட்டார் நம்பி நாராயணன். இவர் இந்திய அறிவியலாளரும் இஸ்ரோவின் முன்னாள் முக்கிய அதிகாரியும் ஆவார். வாயுக்களை திரவமாக மாற்றி அதை எரிபொருளாக பயன்படுத்துவது கிரியோஜெனிக் டெக்னாலேஜி ஆகும். அப்துல்கலாம் திடப்பொருட்களை எரிபொருளாக பயன்படுத்தி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த போது, திரவ எரிபொருள் பயன்படுத்துவது குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டிருந்தார் நம்பி நாராயணன்.
இவர் கைது செய்யப்படும்போது இந்திய விஞ்ஞானி பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றுவிட்டார் என பரபரப்பாக பேசப்பட்டது. நீதிமன்றதுக்கு அவரை அழைத்துச்செல்லும் போது அவரை சூழ்ந்த பொதுமக்கள் ‘தேச துரோகி.. தேச துரோகி ’ என கோபமாக கோஷமிட்டனர். ஒரே நாளில் அவரின் புகழ் அனைத்தும் சிதைக்கப்பட்டது.
1996-ம் ஆண்டில் இது கேரள காவல்துறையால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு எனவும் நம்பி நாராயணன் நிரபராதி எனவும் சி.பி.ஐ அறிக்கை அளித்தது. இதனைத்தொடர்ந்து நம்பி நாராயணனை விடுவித்தது நீதிமன்றம். அதற்குள்ளாக அவரின் பெயரும் புகழும் முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 50 நாட்கள் சிறையில் இருந்தார் நம்பி. சிறையில் இருந்தபோது தான் அடித்து துன்புறுத்தப்பட்டதுடன் பல்வேறு சித்தரவதைகளுக்கும் ஆளானதாக ‘Orbit of memories’ என்கிற தன் சுயசரிதை புத்தகத்தில் எழுதியிருந்தார் நம்பி. மேலும், ‘எனக்கு நேர்ந்தவை எல்லாம் ஏதோ ஒரு திரைப்படம் பார்ப்பது போலவும்.. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நானே இருப்பது போலவும் எனக்குத் தோன்றியது’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்தே Rocketry: The nambi Effect (ராக்கெட்ரி: நம்பியின் விளைவு) எனும் படத்தை எடுத்து இந்தி, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிட்டுள்ளார் இப்படத்தின் நடிகரும் இயக்குநருமான மாதவன். இப்படத்தின் முதல் பாதியில் ராக்கெட் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு சிக்கலான விஷயங்களை பேசுவதால் சுமாராக இருக்கிறது எனவும் நம்பி கைது செய்யப்பட்ட பிறகான எமோஷ்னல் ட்ராமாவை கொண்டிருக்கும் இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது எனவும் பரவலான விமர்சனங்களை பெற்றிருந்தன. இப்படம் கணிசமான வரவேற்பை பெற்றிருந்தாலும் எதிர்ப்பார்த்த அளவிலான வசூலை பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ராக்கெட்ரி திரைப்படம் – அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் – குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணன் அவர்களின் வரலாற்றை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையான தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
என்னதான் தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் எந்த நல்ல படைப்புகளையும், படைப்பாளிகளையும் ரஜினி பாராட்ட தவறியதில்லை. பல படங்களையும் அவர் பாராட்டுவதை பார்த்து சிலர், ‘ என்ன ரஜினி சார் வரவர சினிமா விமர்சகர் மாதிரி எல்லா படத்துக்கும் ரிவியூ சொல்றாரு’ என செல்லமாக கலாய்க்கவும் செய்கின்றனர். ஆனால் அந்த காலம் தொட்டே தான் ரசித்த எந்த ஒரு படத்தை பற்றியும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பாராட்ட தவறியதில்லை ரஜினி. ரஜினியின் போட்டியாளராக பார்க்கப்படும் கமலின் படங்களையும் முயற்சிகளையுமே ரஜினி பல மேடைகளில் பெருமையுடன் உயர்த்தி பேசிய வீடியோக்களை நம்மால் பார்க்க முடியும். இந்நிலையில் ஈகோ பார்க்காமல் யாரையும் மனமுவந்து பாராட்டும் ரஜினியின் இந்த செயலை பலரும் பாராட்டுவதோடு, ‘அதுனாலதான் அவர் இன்னைக்கும் சூப்பர் ஸ்டாரா இருக்காரு எனவும் புகழ்ந்துவருகின்றனர்.
– வேல் பிரசாந்த்







