முதலமைச்சர் ஏகநாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு விரைவில் கவிழும் என்று மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடே தொலைக்காட்சி நடத்திய விழா ஒன்றில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
இது ஒரு நெறிமுறையற்ற, ஜனநாயகமற்ற அரசு எனக் குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் வென்றிருக்கலாம் ஆனால் மகாராஷ்டிர மக்களின் இதயத்தை வெல்லவில்லை என்று குறிப்பிட்டார்.
ஒரு கட்சி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஜனநாயகத்தை தகர்க்கலாம் என்றும், ஆனால் நாட்டு மக்கள் ஜனநாயக வழிமுறைகளைப் பயன்படுத்தி அதனைத் தகர்த்துவிடுவார்கள் என்று கூறி பாஜகவை மறைமுகமாகச் சாடினார்.
சிவ சேனா கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அஸ்ஸாமில் இருந்தபோது, அவர்களுக்கு பணமும் அவர்கள் விரும்பும் மற்றவற்றையும் கொடுத்த கட்சி பாஜக என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் வாரிசு அரசியல் செய்வதாக பாஜக முன்வைக்கும் விமர்சனத்திற்கு மம்தா பானர்ஜி பதில் அளித்தார். வங்கதேசத்தில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மரணத்திற்குப் பிறகு அவரது மகளான ஷேக் ஹசீனா அந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதைச் சுட்டிக்காட்டிய மம்தா, வேறு யாரால் இதைச் செய்திருக்க முடியும் என்றார்.
தனது சகோதரரின் மகன் அபிஷேக் பானர்ஜி குறித்து குறிப்பிட்டு பேசிய மம்தா பானர்ஜி, மக்கள் அவரை இரு முறை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும் இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். இளைய தலைமுறை பொறுப்புகளை ஏற்பதை அவர்கள் விரும்பவில்லையா என்றும் மம்தா பானர்ஜி வினா எழுப்பினார்.









