பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பான இடங்களைப் பயன்படுத்தி பயிற்சி பெறும் பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக அந்நாடு குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்து வரும் ஆப்கானிஸ்தான் இது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறுகிறது.
இந்த நிலையில் இன்று வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ராணுவப் பாதுகாப்பு சோதனைச் சாவடி ஒன்று மீது பயங்கராவதிகள், தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை சோதனைச் சாவடி மீது மோதி பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் டாங்க் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த சண்டையில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்றும் அழைக்கப்படும் உள்ளூர் தாலிபான் பயங்கரவாதிகள், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாகவும் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




