தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பு 1,000ஐ கடந்த நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிற் பூங்காவில் தனியார் கார் நிறுவனத்தின் புதிய கிளையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிண்டி கிங்ஸ் மருத்துவமனை மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக
மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா பரவல் உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா டெல்லி போன்ற இடங்களில் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் டெல்லியில் 1,000 என்ற எண்ணிக்கையில் இருந்த தோற்று 24 மணி நேரத்தில் மேலும் 1,000 ஆக அதிகரித்துள்ளது.
ஓமிகிரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல பல்வேறு வகைகளில் வைரஸ் உருமாறி பரவி வருகிறது. இந்த சூழலில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு ஏதாவது சளி, காய்ச்சல் இருந்தால் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். பாதிப்பு இருக்காது என பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்” என்றும் கூறினார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளுக்கு தற்போது வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 50,000 முதல் 1 லட்சம் வரை தோற்று பரவல் அதிகரித்து வருகிறது. பிஎ4, பிஎ5 உள்ளிட்ட வகைகளில் வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 1,600 நபர்களுக்கு தோற்று பாதித்துள்ளது. 92% நபர்கள் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 8% பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை மருத்துவமனையில் 5 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் தனிமைப்படுத்த வசதி இல்லாதவர்கள் மருத்துவமனை மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து கொரோனா கேர் சென்டர் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி ஸ்டான்லி கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துமனைகள் கொரோனாவுக்கு தனிப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தொற்று அதிகரித்தாலும் உயிர் பாதிப்பு என்பது குறைவாகவே உள்ளது. தொற்று பாதித்தவர்கள் 6 முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் மீண்டும் நெகட்டிவ் வந்து விடுகிறது. இந்த தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
சென்னையில் 122 இடங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தோற்று பாதித்தவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக அந்த இடங்களில் மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு நீட் தேர்வு இல்லாத தமிழக பாடத்திட்டத்தில் மருத்துவம் படித்த கடைசி பேட்ச் மாணவர்கள் 3 தங்க பதக்கம் பெற்றுள்ளனர், அவர்கள் இன்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்” என்று தனது பேட்டியின்போது அமைச்சர் கூறினார்.