கேரளாவில் “வாரிசு” திரைப்படம் 400 திரையங்குகளில் வெளியாகி முதல் நாளிலேயே ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக காட்சியளித்ததோடு, ரசிகர்கள் வண்ண வண்ண பட்டாசுகளை வெடித்து ஆடி பாடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் விஜய். இவர் நடித்த அனைத்து படங்களுமே கேரளாவில் செம ஹிட் அடித்துள்ளதோடு, ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடுவதும் வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் தில் ராஜு தயாரித்து, வம்சி பைடிப்பள்ளி இயக்கி , தளபதி விஜய் அவர்களோடு சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து, குடும்ப செண்டிமெண்ட் கதையாக வெளிவந்துள்ள “வாரிசு” திரைப்படம் இன்று கேரளாவில் 400 திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக கேரள விஜய் ரசிகர்கள், தமிழக ரசிகர்களை போலவே, அங்கு பெரிய பெரிய கட்டவுட்களை வைத்து அசத்தியுள்ளனர்.
மேலும் கேரளாவில் இன்று வெளியான “வாரிசு” திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே இன்றைய நாளுக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திரையரங்கில் அதிகாலை 4 மணிக்கு வெளியான படத்திற்கு , நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்கு முன்பாக குவியத்தொடங்கி, காத்திருந்ததோடு, அதிகாலை முதலே பட்டாசுகள் வெடித்தும், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதோடு விஜய்க்கு ஜே என்ற முழக்கங்களையும் எழுப்பிய ரசிகர்கள், திரையரங்கிற்கு உள்ளே டி.ஜே. இசைக்கு ஏற்பாடு செய்து, அங்கு விஜயின் மக்கள் இயக்கம் கொடியுடன் ஆடிப்பாடி உற்சாக கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர்.