தீபாவளி ட்ரீட்டாக அடுத்தடுத்து வெளியான பல்வேறு நடிகர்களின் திரைப்படங்கள் குறித்த அப்டேட்களால், சினிமா ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் சுந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகி உள்ள ’மைக்கேல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ’பான் இந்தியா’ படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள படம் ’13’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசரை நடிகை ஹன்சிகா மோத்வானி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் குமார் – கவுதம் மேனன் இணைந்து நடித்த ’செல்ஃபி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததால், ’13’ படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ’மிரள்’. வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ள இது வருகிற நவம்பர் மாதம் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.








