மீனவர்களுக்கு மானியம்: திமுக எம்பி வில்சன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

மீனவர்களுக்கு மானியம் வழங்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து திமுக எம்பி வில்சன் கேள்விக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மாநிலங்களவை எம்பி…

மீனவர்களுக்கு மானியம் வழங்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து திமுக எம்பி வில்சன் கேள்விக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மாநிலங்களவை எம்பி வில்சன் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். அந்த வகையில் தமிழக மீனவர்கள், நாடு முழுவதும் மீன்பிடி பாத்திரங்கள் வாங்குவதற்காக மானியம் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய மீன் வளத் துறை அமைச்சர் பர்சோட்டம் ரூபாலா பின்வருமாறு பதில் அளித்துள்ளார். “மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை பிரதான் மந்திரி மட்ஸ்யா சம்பட யோஜனா என்கிற முதன்மையான திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இது இந்திய மீனவ சமுதாயத்தில் மிகப்பெரிய நீலப்புரட்சியையும், நிலையான முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

இதற்காக தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2020 – 21 நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ. 20,050 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் மீனவர்கள், மீனவ விவசாயம், தொழில் முனைவோர்கள் என அனைவருக்கும் நிதி உதவி வழங்கும். இவற்றில் ஏற்கனவே உள்ள மீன்பிடி பாத்திரங்கள், வலை, படகு, கண்காணிப்பு கருவிகளை ஐஸ் பெட்டியுடனான மோட்டார் சைக்கிள் மேம்படுத்துதல்,, மீன் சந்தைக்கு உதவுதல் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகின்றன.

2020 – 2021 நிதியாண்டில் மட்டும் மத்திய மீன்வளத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள ஏராளமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மீன்வளம் முன்னேற்றத்துக்கு ரூ. 7,268 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் மத்திய அரசு பங்களிப்பு ரூ. 2,785 கோடியில் முதல்கட்டமாக ரூ.1,868 கோடி வெளியிடப்பட்டுவிட்டது. இவற்றில் தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கப்பட்ட ரூ. 361 கோடிக்கான திட்டத்தில், ரூ. 126 கோடி மத்திய அரசு பங்களிப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் மீன்பிடி தடைகாலத்தில் பதிவு செய்துள்ள மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 3,000 நிதி உதவி செய்கிறது. இதன் மூலம் நாடு முழுவதும் 8,12,195 பேர் பயனடைந்துள்ளனர்.” என்று பதில் அளித்துள்ளார்.

மாநிலங்களவை நடவடிக்கைகள் குறித்து ட்விட்டரில் மற்றொரு பதிவில் வில்சன் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் நெல் கொள்முதலை 2022 அக்டோபருக்கு பதிலாக, 2022 செப்டம்பரில் முன்கூட்டியே துவங்க வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் தனது அமைச்சகத்திற்கு கிடைக்கப்பெற்றதாக ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமோர் என் கேள்விக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும், 18.07.2022 அன்றைய ஒன்றிய அரசின் கடிதம் மூலம் தமிழகத்தில் நெல் கொள்முதல் காலத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அதாவது 2022-23 ம் ஆண்டிற்கான கரீப் சந்தைப் பருவ காலமான 01.09.2022 முதல் துவங்க ஒப்புதல் அளித்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான என்னுடைய மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் அவர்கள், ஒரு குறிப்பிட்ட பயிரை விதைப்பதற்கு விவசாயிகள் முன்னதாகவே முடிவெடுக்கும் வகையில், விதைப்புப் பருவத்திற்கு முன்னதாகவே 2022-23 ம் ஆண்டின் சந்தைப்படுத்தல் பருவத்திற்கான காரிப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலை 08.06.2022 அன்றே அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.” என பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.