எம்.ஜி.ஆர் முதல் சூர்யா வரை…

திரைத்துறைக்கான தேசிய விருது இந்தியாவில் 1954ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், சிறந்த நகடிருக்கான தனி நபர் விருதுகள் வழங்கப்படுவது 1967ம் ஆண்டிலிருந்தே தொடங்கின. முதலில் சிறந்ந நடிகருக்கான பாரத் விருது என்கிற பெயரில் வழங்கப்பட்ட இந்த…

திரைத்துறைக்கான தேசிய விருது இந்தியாவில் 1954ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், சிறந்த நகடிருக்கான தனி நபர் விருதுகள் வழங்கப்படுவது 1967ம் ஆண்டிலிருந்தே தொடங்கின. முதலில் சிறந்ந நடிகருக்கான பாரத் விருது என்கிற பெயரில் வழங்கப்பட்ட இந்த தேசிய அங்கீகாரம் பின்னர், 1975ம் ஆண்டு முதல் சிறந்த நடிகருக்கான ராஜாத் கமல்  விருது என்கிற பெயரில் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து சான்றிதழுடன் பரிசுத் தொகையும் சேர்க்கப்பட்டது.

கடந்த 45 ஆண்டுகளில்  53 ராஜாத் கமல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 8 முறை இரண்டு நடிகர்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த 45 ஆண்டுகளில் 25 முறை இந்தி நடிகர்கள் ராஜாத் கமல் விருதைப் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மலையாள திரையுலகம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 13 முறை வென்றுள்ளது. மூன்றாது இடத்தில் தமிழ் திரையுலகம் உள்ளது. கோலிவுட் இதுவரை 9 முறை  ராஜாத் கமல் விருதை வென்றுள்ளது. எம்.ஜி.ஆர், கமல், விக்ரம், பிரகாஷ்ராஜ், தனுஷ், சூர்யா ஆகியோர் தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற தமிழ் நடிகர்கள் ஆவார்கள். இதில் கமல்ஹாசன் 3 முறையும், தனுஷ் இரண்டு முறையும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் எந்தெ படத்திற்காக எப்போது சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வாங்கினார்கள் என்பது குறித்த விபரங்களை பார்ப்போம்.

எம்.ஜி.ஆர்

தமிழ் திரையுலகில் முதல் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகில் இமாலய உயரத்தை அடைந்த எம்.ஜி.ஆர்தான் தென் இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த விருதை வாங்கியுள்ளார். 1971ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த ”ரிக்ஷாக்காரன்” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதான பாரத் விருதைப் பெற்றார். எம்.ஜி.ஆர். பாரத் விருது பெற்றதை அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கொண்டாடித் தீர்த்தனர். எனினும் அரசியல் செல்வாக்கால்தான் எம்.ஜி.ஆருக்கு விருது கிடைத்ததாக விமர்சனங்களும் எழுந்தன.

கமல்ஹாசன்

திரையுலகில் விருதுகளை குவித்து கலைஞானியாக விளங்கும் கமல்ஹாசன் 3 முறை தேசிய விருதுகளை வென்ற பெருமையையும் பெற்றுள்ளார். 1982ம் ஆண்டு வெளிவந்த “மூன்றாம் பிறை” படத்திற்ககாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை முதல் முறையாக வென்றார் கமல்ஹாசன். அவரது கலை பயணத்திலும், தமிழ் சினிமாவின் கலைப் பயணத்திலும் முக்கிய மைல்கல்லாக அமைந்த படம் “மூன்றாம் பிறை”. பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவான இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் அதில் கமல்ஹாசன் வெளிப்படுத்திய நடிப்பும், தமிழ் திரையுலகம் என்கிற நூலகத்தில் அடிக்கடி புரட்டிப்பார்க்கப்படும் புத்தகமாக உள்ளது.

அடுத்ததாக 1987ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட “நாயகன்” படத்திற்காக தனது இரண்டாவது ராஜாத் கமல் விருதை பெற்றார் கமல்ஹாசன். கதை சொல்லுதல், காட்சி அமைப்புகளில் தமிழ் சினிமாவின் புதிய பரிணாமமாக அமைந்த  “நாயகன்” படத்தில் வேலு நாயக்கராகவே வாழ்ந்திருப்பார் கமல்ஹாசன். ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளிவந்த “இந்தியன்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்றாவது முறையாக பெற்றார் கமல்ஹாசன். பெரும் வெற்றிபெற்ற இந்தப்படம் ஒரு கமர்ஷியல் படமாக இருந்தாலும் அதில் தாத்தா கதாபாத்திரத்திற்காக தனது உருவத்தை முற்றிலும் மாற்றி மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கமல்ஹாசன்.

விக்ரம்

கமல்ஹாசனைப்போல் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பதற்காக தனது உருவத்தையே மாற்றும் மற்றொரு நடிகர் விக்ரம். படத்திற்கு படம் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றி அசத்தும் விக்ரம், “பிதாமகன்” படத்திற்காக தேசிய விருதினை பெற்றார். 2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த “பிதாமகன்” திரைப்படம், பாலா, விக்ரம், சூர்யா ஆகிய மூன்று பேரின் திரைப்பயணத்திலும் ஒரு மைல் கல்லாக அமைந்தது. மயானத்தில் பிறந்து வளர்ந்த சித்தன் கதாபாத்திரத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விக்ரம். படத்தில் அவரது உடல்மொழிகள் மிகவும் பேசப்பட்டன.

பிரகாஷ்ராஜ்

எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெறும் பிரகாஷ்ராஜ் “காஞ்சிவரம்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப்பெற்றார். 2008ம் ஆண்டு வெளிவந்த காஞ்சிவரம் படத்தில் வறுமையின் பிடியியல் சிக்கித் தவிக்கும் நெசவாளியாக  உயிரோட்டமான நடிப்பை வெளியிப்படுத்தியிருந்தார் பிரகாஷ் ராஜ். ப்ரியதர்ஷ்ன் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஏற்றிருந்த வேங்கடம் கதாபாத்திரம் பல்வேறு இடங்களில் பார்வையாளர்களின் கண்களை குளமாக்கி நெஞ்சை நெகிழச் செய்தது.

தனுஷ்

தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரனான தனுஷ் இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். இமேஜ் பார்க்காமல் கதாபாத்திரத்திற்காக தனது கெட்டப்பை எப்படி வேண்டுமானாலும் மாற்றத் துணிந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனது இரண்டாவது படமான காதல் கொண்டேனிலேயே யார் இந்த நடிகர் என தமிழ் சினிமாவின் புருவத்தை உயர்த்த வைத்தவர். 2011ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த “ஆடுகளம்” படத்திற்காக தனது முதல் தேசிய விருதைப் பெற்றார் தனுஷ். சேவல் சண்டையில் ஆர்வம் கொண்ட கிராமத்து இளைஞனாக கே.பி.கருப்பு என்கிற கதாபாத்தில் தனுஷ் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக மதுரை வட்டார மொழியை தத்ரூபமாக அவர் உச்சரித்தவிதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே வெற்றி மாறன் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்த “அரசுன்” படத்திற்காக தனது இரண்டாவது தேசிய விருதை பெற்றார் தனுஷ். ஆடுகளம் படத்தில் மதுரை வட்டார வழக்கில் அசத்திய தனுஷ், “அசுரன்” படத்தில் திருநெல்வேலி வட்டார வழக்கில் தனது அபார நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். ஆவேசம், அமைதி என முற்றிலும் மாறுபட்ட இரண்டு கோணங்களில் ஒரு வயதான தந்தையாக சிவசாமி கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருந்தார் தனுஷ்

சூர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காப்பான் படத்தில் கூறியதுபோல், படத்திற்கு படம் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் தன்னைத்தானே செதுக்கி வளர்ந்தவர் சூர்யா. சிவகுமார் என்கிற பிரபல நடிகரின் வாரிசாக திரையுலகில் நுழைவது அவருக்கு எளிதாக இருந்தாலும் வளர்வது எளிதாக இல்லை. சூர்யாவின் தந்தை சிவக்குமார் என அறியப்படும் அளவிற்கு திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த சூர்யா,

“சூரரை போற்று” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். சுதா கொங்கரா இயக்கிய “சூரரை போற்று” 2020ம் ஆண்டு  ஓடிடியில் வெளியானபோது பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. எனினும் அவற்றையெல்லாம் கடந்து பல்வேறு பாராட்டுக்களைப் பெற்ற “சூரரை போற்று” திரைப்படம் தற்போது சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்துள்ளது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் இளைஞர்களுக்கும் தன்னபிக்கையூட்டும் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை சூர்யா வெளிப்படுத்தியிருந்தார்.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.