முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஆளும் திமுகவில் வருகிறது அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்


இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

கட்டுரையாளர்

திமுகவில் உள்ள அணிகள், தலைமைக் கழக  நிர்வாகிகள் மாற்றம் என அடுத்தடுத்து தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட திமுக தலைமை தயாராகியுள்ளது.

திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று அக்டோபர் 9 ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழுவும் கூடியுள்ளது. அப்பொதுக்குழுவில் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக கனிமொழியை நியமித்ததுடன், நாடாளுமன்ற தேர்தலுக்கான அழைப்பையும் விடுத்திருந்தார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படக்கூடியதாக பேரூர், ஒன்றிய, நகர, மாவட்ட, மாநில நிர்வாகிகள் பொறுப்புகள் இருந்தாலும். தேர்தல் இல்லாமல் நியமனம் மூலம் நிரப்பக்கூடியவையாக திமுகவின் 20 அணிகள் மற்றும் 11 குழுக்களின் பொறுப்புகள் உள்ளது. பொதுக்குழு முடிந்த கையோடு, திமுகவின் பல்வேறு அணிகளில் காலியாகவுள்ள பொறுப்புகளை நிரப்பவும் முடிவெடுத்தார் மு.க. ஸ்டாலின். இதனையடுத்து, “பொறுப்புகளில் இல்லாத மூத்த நிர்வாகிகள் பட்டியல், மாற்றப்பட வேண்டிய நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து வழங்குங்கள்” என கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தார். 

பட்டியல் தயாரிப்பு

திமுக மகளிரணிச்செயலாளராக இருந்த கனிமொழி கருணாநிதி, துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதனால் அந்தப் பொறுப்பு காலியானது. திமுகவின் இளைஞரணியில் மாநில துணைச்செயலாளர்களாக உள்ளவர்களில் அதிக வயதுடையோரை விடுவிப்பது, என அனைத்து அணிகளிலிலும் மேற்கொள்ள வேண்டிய நிர்வாகிகள் மாற்றங்களை திட்டமிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

பொறுப்புகள் மாற்றம் ஒருபுறம் உள்ள நிலையில், ஏற்கனவே வகித்து வரும் பொறுப்பை மாற்றித்தர வேண்டும் என்ற விருப்பத்தையும் சில நிர்வாகிகள் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதுகுறித்து அக்டோபர் 21 ஆம் தேதி “மேலும் சில மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது திமுக” என நியூஸ் 7 தமிழ் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தது.

அமைப்புச்செயலாளர்

திமுகவின் தலைமை பொறுப்புகளான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச்செயலாளருக்கு அடுத்ததாக உள்ள அமைப்புச்செயலாளர் பொறுப்பை வகித்து வரும் ஆர்.எஸ். பாரதி, திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பொறுப்பு காலியாக உள்ள நிலையில், அந்த பொறுப்பின் மீதான எதிர்பார்ப்பை கட்சி தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

திமுகவின் அமைப்புச்செயலாளராக இருந்த டி.கே.எஸ். இளங்கோவன் 2014 ஆம் ஆண்டு முதல் செய்தித்தொடர்புச்செயலாளராக பணியாற்றி வருகிறார். டி கே எஸ் இளங்கோவன். ஆர்.எஸ். பாரதி அமைப்புச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டால், மீண்டும் இளங்கோவனுக்கு அமைப்புச்செயலாளர் பொறுப்பு வழங்க திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின்.


தலைமை நிலையச் செயலாளர்

திமுகவின் தலைமை நிலையச்செயலாளர்களாக பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் உள்ளனர். இருவருக்கும் வாரியங்களின் தலைவர் பதவிகளை வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். கூடுதலாக இருவரை தலைமை நிலையச் செயலாளர்களாக்குவதற்கு ஆலோசித்துள்ளார் ஸ்டாலின். ஏற்கனவே திமுகவின் தலைமை நிலையச் செயலாளராக இருந்து பாஜகவில் இணைந்து, மீண்டும் திமுகவிற்கு திரும்பி வந்துள்ள கு.க. செல்வம், தொழிற்சங்க நிர்வாகியான பிடிசி ஜி. செல்வராஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறுகின்றனர் திமுக நிர்வாகிகள்.

மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்

2015 ஆம் ஆண்டு முதல் திமுகவின் மகளிரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கனிமொழி கருணாநிதி, துணைப்பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பொறுப்பு நிரப்பபட வேண்டியதாக இருந்தது. மகளிர் அணிச்செயலாளராக ஹெலன் டேவிட்சன் பெயரை ஸ்டாலின் இறுதி செய்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 51 வயதான ஹெலன் டேவிட்சன் ஆசிரியையாக இருந்து அரசியலுக்கு வந்தவர். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலிருந்து 2009இல் தேர்வு செய்யப்பட்ட அவர், திமுகவின் மகளிர் தொண்டரணிச் செயலாளராக இருந்தவர். அவருக்கு மகளிரணி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் தொண்டரணிச் செயலாளராக நாமக்கல் ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்றத்தில் இளைஞர் அணி…

திமுகவின் இளைஞரணியை உருவாக்கி அதன் செயலாளராக இருந்தவர் மு.க. ஸ்டாலின். அவருக்குப் பின் வெள்ளக்கோயில் சாமிநாதனும், தற்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக உள்ளார். இளைஞரணி துணைச்செயலாளர்களாக தாயகம் கவி, ஆர்.டி. சேகர், அசன் முகமது ஜின்னா, பைந்தமிழ் பாரி, ஜோயல், துரை ஆகியோர் இருந்தனர். வயதின் காரணமாக தாயகம் கவி, ஆர்.டி. சேகர், அசன் முகமது ஜின்னாவை விடுவித்து, மாவட்ட அமைப்பளர்களாக உள்ளவர்களை துணைச்செயலாளர்களாக உயர்த்தும் முடிவை எடுத்தார் ஸ்டாலின்.

இளைஞரணி துணைச்செயலாளராக இருந்து மாவட்டச்செயலாளரான அன்பில் மகேஷின் இடமும் 2 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், துணைச்செயலாளர்களாக ஜோயல், இன்பா, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப்ராஜா, ஆனந்தகுமார் ஆகியோரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

அமைப்புச்செயலாளர், செய்தித்தொடர்புச் செயலாளர், தொமுச தலைவர், தலைமை நிலையச் செயலாளர், மகளிர் அணிச்செயலாளர், இளைஞரணி துணைச்செயலாளர் என பல்வேறு பொறுப்புகளுக்கான பெயர் பட்டியலுடன் கடந்த சில நாட்களாக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வந்த மு.க. ஸ்டாலின். மகளிர் அணிச்செயலாள்ர், இளைஞரணி துணைச்செயலாளர் பொறுப்புகளுக்கானவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பொறுப்பிற்கும் யாரை நியமிக்க வேண்டும் என அவரே நேரடியாக தலையிட்டு முடிவெடுத்து அறிவித்து வரும் நிலையில், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் நிர்வாகிகள் குறித்து முழு விவரங்களையும் ஆராய்ந்து வருவதாகக் கூறுகின்றனர் நிர்வாகிகள்.

அடுத்தடுத்த நாட்களுக்குள்ளாக மற்ற நிர்வாகிகள் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், நிர்வாகிகள் மாற்றம் குறித்த அறிவிப்பிற்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகவும் முடிவு செய்துள்ளார்.

மண்டல பொறுப்பாளர்

திமுகவின் கட்சி அமைப்பில் தலைமைக்கழகத்திற்கு அடுத்து மாவட்டங்கள் உள்ள நிலையில், மண்டலங்கள் ஏற்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய மண்டலங்கள் உருவாக்கி அதற்குள் மாவட்டங்களை கொண்டு வரலாமா? என திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக  கூறப்படுகின்றது. அப்படி மண்டலங்கள் உருவாக்கப்படும்போது மூத்த நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை அளிக்கவும் வாய்ப்பாக இருக்கும் என கருதுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை மாவட்டச்செயலாளர்கள் தொடங்கியுள்ள நிலையில், மண்டல பொறுப்பாளர்கள் குறித்த முடிவு எட்டப்பட்டால் மண்டல பொறுப்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்படலாம்.

  • இலா. தேவா இக்னேசியஸ் சிரில் @Deva_iCL
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆப்கனை விட்டு வெளியேறுபவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கும் மக்கள்: காபூலில் சோகம்

Gayathri Venkatesan

துப்பாக்கியால் சுட்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் 4 பேர் பலி: சக வீரர் திடீர் தாக்குதல்

Halley Karthik

மத்திய பிரதேசத்தில் கொள்ளைக்காரர்கள் குறித்த அருங்காட்சியம்!

Nandhakumar