கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உதவி காவல் ஆய்வாளர்களுக்கான தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில், உதவி காவல் ஆய்வாளர் தேர்வு எழுதிய தேர்வர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய அவர்கள், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு, கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றதாகவும், தேர்வு முடிவுகள், அதே ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
தேர்வு முடிவுகளில், ஒரே அறையில் தேர்வு எழுதிய, அடுத்தடுத்த தொடர் வரிசை எண் கொண்ட பலரும், ஏற்கனவே காவலர்களாக பணிபுரியும் சிலரும் வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் விளக்கம் கேட்டபோது, போதுமான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும், எனவே, இதுகுறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பல்வேறு குளறுபடிகளோடு நடைபெற்றுள்ள இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தேர்வை ரத்து செய்துவிட்டு நேர்மையான முறையில் மீண்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.







