தமிழகத்தில் குழந்தைகள் தினக் கொண்டாட்டத்திற்காக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்காக 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 பிராண்டட் கேக் துண்டுகளைக் கொள்முதல் செய்து விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியைத் தமிழக அரசு கோரியுள்ளது. இதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) அனைத்து மாவட்டச் செயல்பாட்டுக் கிடங்குகளுக்கும் கேக்குகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டு குழந்தைகள் தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தக் கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான டெண்டர் குறிப்பு எண் ME7/032443/2026 ஆகும்.
நவம்பர் 14-ம் தேதி நிகழ்ச்சி நடைபெறுவதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொள்முதல் மற்றும் விநியோகத்தை முடிப்பதற்காகக் குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் http://www.tntenders.gov.in இணையதளம் வழியாக இரு உறை மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறையில் பெறப்படுகின்றன.
இந்த டெண்டரின்படி, ஒவ்வொரு கேக் துண்டும் அதிகபட்சம் 45 கிராம் எடையில், தனித்தனியாகப் பேக் செய்யப்பட்ட ஸ்பாஞ்ச் வகைக் கேக்காக இருக்க வேண்டும். எடையில் 2 கிராம் வரை மாறுபாடு அனுமதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு வெவ்வேறு சுவைகளில் கேக்குகள் கிடைக்கும் வகையில், மிக்ஸ்டு ஃப்ரூட் அல்லது டூட்டி ஃப்ரூட்டி, வெண்ணிலா, சாக்லேட், பட்டர் அல்லது மில்க் ஸ்பாஞ்ச் உள்ளிட்ட பல்வேறு வகைகளை வழங்க வேண்டும். பிற வகைகளும் அனுமதிக்கப்படலாம். ஒவ்வொரு வகைக் கேக்கின் மாதிரியும் தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டின்போது ஆய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கேக்குகள் மென்மையாகவும், நல்ல மணத்துடனும் இருக்க வேண்டும். பூஞ்சை, பூஞ்சைத் தொற்று, கொழுப்புச் சிதைவால் ஏற்படும் துர்நாற்றம் உள்ளிட்ட குறைபாடுகள் இருக்கக் கூடாது. மேலும், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட நிறமூட்டிகள் இல்லாத தயாரிப்புகளாக இருக்க வேண்டும் எனத் தொழில்நுட்ப நிபந்தனைகள் தெரிவிக்கின்றன.
கேக்குகள் விநியோகிக்கப்படும் நாளிலும் தரம் குன்றாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அவற்றுக்கு நீண்ட காலச் சேமிப்புத் திறன் இருக்க வேண்டும். குறிப்பாக, 2026 நவம்பர் 14-ம் தேதி கேக்குகள் கிடங்குகளில் பெறப்படும்போது, அறிவிக்கப்பட்ட மொத்தச் சேமிப்புக் காலத்தில் குறைந்தது 30 நாட்கள் மீதமிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கேக் உறைகளில் பிராண்ட் பெயர், கேக்கின் வகை, நிகர எடை, FSSAI லோகோ மற்றும் உரிம எண், தயாரிப்பு தேதி, தொகுதி எண், காலாவதி அல்லது சிறந்த பயன்பாட்டுக்கான தேதி, ஊட்டச்சத்து விவரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் குறித்த தகவல்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்பாட்டுக் கிடங்குகளுக்கு கேக்குகளை நேரடியாகக் கொண்டு சேர்ப்பது ஒப்பந்ததாரரின் பொறுப்பாகும். வருவாய் மாவட்டங்களின் ஒவ்வொரு வட்டத்திலும் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட கிடங்குகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல் நடைமுறை, தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், 1998 மற்றும் அதற்கான 2000-ம் ஆண்டு விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தைகள் தினத்தையொட்டி 61,84,566 கேக் துண்டுகளை விநியோகம் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகே கேக்குகளை வழங்கும் நிறுவனம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் தெரியவரும்.




