அரசுப் பேருந்தை நிறுத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவர்களுக்கு நூதன தண்டனை

சென்னையில் அரசு மாநகரப் பேருந்தை வழிமறித்து நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட 2 கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்தை சீர் செய்யும் நூதன தண்டனையை போலீசார் வழங்கியுள்ளனர். சென்னையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் ரயிலில்…

சென்னையில் அரசு மாநகரப் பேருந்தை வழிமறித்து நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட 2 கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்தை சீர் செய்யும் நூதன தண்டனையை போலீசார் வழங்கியுள்ளனர்.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் ரயிலில் பயணித்து, நடைமேடையில் பட்டாக் கத்தியை உரசியபடி சென்ற வீடியோ சமீபத்தில் வைரலானது. அதேபோல ‘ரூட்டுத் தல’ விவகாரத்திலும் கல்லூரி மாணவர்களின் பல்வேறு அட்டகாசங்கள் அதிகரித்து வரும் நிலையில், போலீசார் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் எண்ணூர் நெடுஞ்சாலையில், திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி
நோக்கி சென்ற பேருந்தை, இரு கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் நிறுத்தி, ரீல்ஸ் செய்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து வட சென்னை இணை ஆணையர் ரம்யா பாரதி அளித்த உத்தரவின் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன் குமார், அம்மாணவர்கள் இருவரையும் பிடித்து நேரில் பெற்றோருடன் வரவழைத்து எச்சரித்தார். மேலும் அவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு, கல்லூரி முடிந்த பிறகு, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற நூதன தண்டனையும் வழங்கியுள்ளார். அதேபோல அந்த மாணவர்களின் பெற்றோரை இணை ஆணையர் ரம்யா பாரதி நேரில் அழைத்து, இனி இதுபோன்ற தவறு நடைபெறாமல் இருக்க அறிவுறுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.