1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்புத் தேர்வு நாளை, 10ஆம் வகுப்பு தேர்வு நாளை மறுநாள் நடைபெறவுள்ளன. சில நாட்களில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு தொடங்குகிறது. வழக்கமாக ஏப்ரல் இறுதி முதல் ஜூன் முதல் வாரம் வரை கோடை விடுமுறை விடப்படும்.
கொரோனா காரணமாக வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல பள்ளிகள் நடைபெற்று வந்தன. எனினும் கடந்த வருடங்களை விட இந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது. தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகை தரத்தேவையில்லை” என்று அறிவித்தார். வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.







