நல்ல மதிப்பெண் எடுத்திருந்த போதும் தொழில்நுட்ப கோளாறால் ஒரிஜினல் சான்றிதழ்களை அனுப்ப முடியாமல் சட்டக் கல்லூரியில் மாணவன் இடம் மறுக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சார்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவன் யஹ்யா அய்யாஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவில் 600க்கு 505 மதிப்பெண்கள் எடுத்து 84.167 சதவிகிதம் பெற்றார்.
முதல் தலைமுறை பட்டதாரியான இவர் சட்டக் கல்லூரி பயில விரும்பி அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் பதிவு செய்திருந்தார். கடந்த 20ம் தேதி ஒரிஜினல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 22ம் தேதி தான் அனுப்பியுள்ளனர்.
சட்டப் பல்கலைகழகத்தின் சார்பாக மாணவனுக்கு சாதாரண மின்னஞ்சல் வழியாக தகவல்கள் வராமல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக Spam மெஸ்ஸேஜில் மின்னஞ்சல் வந்துள்ளது. இதனால் சட்டப் பல்கலைகழகத்திற்கு இவர்கள் தாமதமாக பதில் அனுப்பியுள்ளனர்.
விதிகளின்படி 20ம் தேதி மாலைக்குள் ஒரிஜினல் சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றவில்லை எனில் இடம் மறுக்கப்படும். இந்த நிலையில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பத்தினர் சட்டப் பல்கலைகழகத்தில் இருந்து பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.







