முக்கியச் செய்திகள் தமிழகம்

நாளை வரும் நாளிதழ்களில் மாணவர்களின் மரணச் செய்தி இல்லாமல் இருக்கட்டும் – கமல்ஹாசன் உருக்கம்

தமிழ்நாடு அரசுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், ஊடகங்களுக்கும் அறிக்கை வாயிலாக கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

நடிகரும், மக்கள் நீதி மையக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ஆம் தேதி மட்டும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். 28 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இத்தோடு வேதனை தீரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

கடந்த சில நாட்களில் மட்டும் தமிழகத்தில் நடந்த சம்பவங்களைப் பட்டியலிடுகிறேன். உயிர்க்கொல்லித் தேர்வான நீட் எனும் அநீதியால் நிஷாந்தி, முரளி கிருஷ்ணன், தனுஷ் ஆகிய மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். மயிலாடுதுறை 11-ஆம் வகுப்பு மாணவன் ரித்தீஷ் கண்ணா உயிரை மாய்த்துக் கொண்டார். ராமநாதபுரம் ஆர்.காவனூர் ஆசாரிமடம் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து உயிரிழப்பு செய்துள்ளார்.

 

போடி குலாலர்பாளையத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கி உயிரிழப்பு செய்துள்ளார். பாண்டமங்கலத்தில் 10-ஆம் வகுப்புப் பயிலும் மாணவன் பரத் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துக் கொண்டார். கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பில் மர்மம் நீடிக்கிறது. மேச்சேரி அரசுப் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்த மாணவி ஒருவர் பள்ளி மாடியில் இருந்து குதித்து உயிரிழப்புக்கு முயன்று, கால்முறிந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

 

காஞ்சிபுரம் ஆர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவன் இஷிகாந்த் பள்ளி மாடியில் இருந்து உயிரிழப்புக்கு முயன்று, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பொதுத் தேர்வில் தோல்வி, நீட் தேர்வு பயம், பெற்றோர் கண்டிப்பு, ஆசிரியரின் அவமதிப்பு, காதல் விவகாரம், வறுமை என இந்தத் உயிரிழப்புகளுக்கான காரணிகள் வேறுபட்டாலும், சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு போராடி வெல்லும் மனவலிமையை நம் பிள்ளைகள் மெல்ல இழந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.

 

மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே வாழ்க்கையின் மிக முக்கிய அம்சம் என்பது போன்ற அழுத்தங்களை ஏற்படுத்துவது, எதிர்காலம் பற்றிய அச்சத்தை விதைத்துக்கொண்டே இருப்பது, மிதமிஞ்சிய கண்டிப்பு, பிறரோடு ஒப்பிட்டு அவமதிப்பது ஆகியவற்றை பெற்றோரும் ஆசிரியர்களும் கைவிட வேண்டும். பருவ வயதின் இளமைத் துடிப்பினால் செய்யும் விடலைத்தனங்களுக்கு அதீதமான உணர்ச்சிகரமான எதிர்வினைகளைத் தவிர்த்து விட்டு நாம் தாண்டி வந்த வயதைத்தான் அவர்களும் தாண்டுகிறார்கள் எனும் அக்கறையோடு அணுகுங்கள்.

 

பிள்ளைகளுடன் ஒரு நண்பனைப் போல பழகுங்கள். அவர்களது கருத்துகள், அபிப்ராயங்கள், விருப்பங்களுக்கு செவி கொடுங்கள். ஒருவரையொருவர் பரஸ்பரம் அவமானப்படுத்திக்கொள்ளாது ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்ளுங்கள். அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் சொன்னா சொன்னதுதான், முடியாதுன்னா முடியாதுதான் போன்ற சர்வாதிகாரத்தனமான கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பதிலாக எதற்காகச் சொல்கிறேன் என்பதைப் பொறுமையாக விளக்குங்கள்.

 

பிள்ளைகள் ஏதேனும் சிக்கலில் மாட்டி இருந்தால் அதை உணர்ச்சிகரமான அணுகுமுறையால் மேலும் பெரிதாக்கிவிடாமல், அதிலிருந்து விடுபட உதவுங்கள். காவல்துறையின் உதவியை நாடுவதற்கு ஒருபோதும் தயங்காதீர்கள். இறுதியாக மிக முக்கியமான ஒன்று. உங்கள் பிள்ளைகளின் தனித்திறனை மேம்படுத்திக்கொள்ள இயன்றமட்டும் உதவுங்கள். உங்கள் பிள்ளைகளின் தனித்திறன் அவர்களது வளர்ச்சிக்கு எதிரி என ஒருபோதும் எண்ணாதீர்கள். கல்வியைக் கைவிட்ட எம்போன்றவர்கள் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டினால், உயரங்களைத் தொட்டிருக்கிறோம் என்பதை மறக்கவேண்டாம்.

 

ஆசிரியர்களே, மாணவர்கள் தங்கள் வாழ்வின் கணிசமான நேரத்தை உங்களோடுதான் செலவிடுகிறார்கள். நீங்கள் அவர்களைப் பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். சொந்தப் பிள்ளையைப் போலவும், ஆரூயிர் நண்பனைப் போலவும் உங்கள் மாணவர்களை நடத்துங்கள். உங்களை விட அவர்களை நன்கறிந்தவர்கள் இருக்கமுடியாது. உங்களிடம் தனக்குத் தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கையை மாணவ மனங்களில் விதையுங்கள்.

ஊடகங்களுக்கு ஓர் விண்ணப்பம். உயிரிழப்புச் செய்திகளை ஒளிபரப்புகையில் உயிரிழப்பு எண்ணம் கொண்டவர்கள் தொடர்பு கொள்ள இலவச மனநல ஆலோசனை வழங்கும் உயிரிழப்புத் தடுப்பு மையத்தின் எண்களோடு சேர்த்து அளிப்பதை ஓர் சமூகக் கடமையாகக் கைக்கொள்ளவேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

தமிழக அரசு ‘உயிரிழப்புத் தடுப்புப் படை’ ஒன்றை அமைக்க வேண்டும். பள்ளிகளில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள் நடப்பதைப் போல, பதின்ம வயது மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள், மனக்குழப்பங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து உதவவேண்டும். நாளை வரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச் செய்தி இல்லாதிருக்கட்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சர்வதேச பயணிகள் விமானங்கள் ரத்து நீட்டிப்பு!

G SaravanaKumar

அரியலூரில் சாராயம் காய்ச்சி விற்ற 9 பேர் கைது!

G SaravanaKumar

ரசிகர்களின் கோப்பை கனவை நிறைவேற்றிய ‘கூல் கேப்டன்’ !

Web Editor