பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம் !

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுகவினரை போலீசார் கைது செய்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுகவினரை போலீசார் கைது செய்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் அடைப்படையில் அதிமுகவினர் இன்று சென்னை, கள்ளக்குறிச்சி, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். அதன் ஒரு பகுதியாக,

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாநகர மாவட்ட அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோரை காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர். இதனால் அதிமுகவினருக்கு ,போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்:

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக விழுப்புரம் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி:

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நடத்தப்படும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனை மீறி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போரட்டத்திற்கு அனுமதி அளிக்காததை கண்டித்து அதிமுகவினர் பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறை துணை ஆய்வாளர்களை தள்ளிவிட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுட்டதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் ப.மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.குமரகுரு, பிரபு, தற்போதை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட 1000திற்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர். இதன் காரணமாக கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து பாதிக்கபட்டது .

ராணிப்பேட்டை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மேற்கு
மாவட்ட செயலாளர் எஸ்.எம். சுகுமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த
முயன்றனர். ஆனால் உரிய அனுமதி இல்லாததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த
போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுகவினர் 300க்கும் மேற்பட்டோரை கைது
செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.